04 May 2011

ஏகத்துவ இமாம் இப்ராஹீம் (அலை)!


அன்று இப்ராஹீம் (அலை) அவர்கள் ஏகத்துவத்தைப் பிரச்சாரம் செய்யும் போது தன்னந்தனி மனிதர்! அவர்கள் பக்கம் யாருமே இல்லை, அல்லாஹ்வைத் தவிர! ஆனால் இன்றோ இந்தச் சமுதாயத்திற்கே அவர்கள் இமாமாக இருக்கின்றார்கள். அவர்கள் இறந்த பிறகும் கூட அவர்களே இமாம்! ஏகத்துவத்திற்கே அவர்கள் தான் இமாம்! ஏன்? அல்லாஹ்வே தன் திருமறையில் சொல்கின்றான்.

இப்ராஹீமை அவரது இறைவன் பல கட்டளைகள் மூலம் சோதித்த போது அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார். “உம்மை மனிதர்களுக்குத் தலைவராக்கப் போகிறேன்” என்று அவன் கூறினான். “எனது வழித் தோன்றல்களிலும் (தலைவர்களை ஆக்குவாயாக!)” என்று அவர் கேட்டார். “என் வாக்குறுதி (உமது வழித் தோன்றல்களில்) அநீதி இழைத்தோரைச் சேராது” என்று அவன் கூறினான். (அல்குர்ஆன் 2:124)

அல்லாஹ் இப்ராஹீம் (அலை) அவர்களை சோதித்ததாகக் கூறுகின்றானே! அந்தச் சோதனைகள் என்ன?

தனிமை!

இப்ராஹீம் (அலை) அவர்கள் சந்தித்த சோதனைகளில் மிகப் பெரிய சோதனை அவர்கள் சமுதாயத்தை விட்டு தனிமைப் படுத்தப் பட்டது தான். ஒரு மனிதனை ஊரெல்லாம் வெறுத்து ஒதுக்கும் போது சொந்த வீட்டில் அரவணைப்பும் அன்புப் பிணைப்பும் இருந்தால் அந்தத் தனிமையை அவர் ஓரளவு தாங்கிக் கொள்ள முடியும். ஆனால் இந்த ஏகத்துவ பெருந்தலைவரை பெற்ற தந்தையே எதிர்க்கும் போது அவர்களது நிலை எப்படி இருந்திருக்கும்? வீட்டில் எதிர்ப்பு! ஊரில் எதிர்ப்பு! சமுதயாம் எதிர்ப்பு! அரசாங்கம் எதிர்ப்பு! ஆனால் இதையெல்லாம் வகை வைக்காது இந்தப் பெருந்தகை தனது கொள்கையில் உறுதியாக நிற்கின்றார்.

இந்தக் கொள்கையில் நெருப்பாய் இருந்து, சிலைகளைத் தகர்த்தெறிந்ததால் நெருப்பில் தூக்கி எறியப்படுகின்றார். (பார்க்க அல்குர்ஆன் 21:51-70)

இந்த இரண்டும் பொது வாழ்வில் இப்ராஹீம் (அலை) அவர்கள் சந்தித்த சோதனைகள்!

இந்தக் கொள்கைக்காக நாட்டைத் துறந்தார்கள். (பார்க்க அல்குர்ஆன்29:26)

நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் தவிக்கின்றார்கள்.

பின்னர் குழந்தை பிறந்து, அதன் முகம் பார்த்து அகமகிழ கொஞ்சும் வேளையில் மனைவியையும், பச்சிளம் குழந்தையையும் தண்ணீரில்லாத பாலைவெளியில் கொண்டு போய் விட வேண்டும் என்ற அல்லாஹ்வின் உத்தரவை ஏற்று அவ்வாறே அங்கு கொண்டு போய் விடுகின்றார்கள்.

குழந்தை இளவலாகி அவர்களுடன் நடை போடும் வயதை அடைந்ததும் அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று அக்குழந்தையை அறுக்க முன் வந்தார்கள். (பார்க்க அல்குர்ஆன் 37:99-107)

இவை அனைத்தும் அவர்களது சொந்த வாழ்க்கையில் அல்லாஹ் வைத்த சோதனைகள்! இந்த எல்லாச் சோதனைகளிலும் இப்ராஹீம் (அலை) அவர்கள் வென்றார்கள். அதனால் தான் அவர்களை இமாமாக ஆக்கியது மட்டுமல்லாமல் அவர்களை அல்லாஹ் தன் நண்பராகவும் ஆக்கினான்.

தன் முகத்தை அல்லாஹ்வுக்குப் பணியச் செய்து, நல்லறம் செய்து, உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றி நடந்தவரை விட அழகிய மார்க்கத்திற்குரியவர் யார்? அல்லாஹ் இப்ராஹீமை உற்ற தோழராக்கிக் கொண்டான். (அல்குர்ஆன் 4:125)

இன்றைக்கு ஹாஜிகள் மக்காவில் செய்யும் பெரும்பான்மையான வணக்கங்களும், ஹஜ்ஜுப் பெருநாளையொட்டி நாம் செய்கின்ற குர்பானி எனும் வணக்கமும் அவர்களின் தியாகத்தின் வெளிப்பாடு தான். அந்த அளவுக்கு அல்லாஹ் அவர்களை நமக்கு இமாமாக ஆக்கி வைத்து, அவர்களை – அவர்களது கொள்கைகளை எதிர்த்த மக்களை வேரறுத்து விட்டான். இதனால் தான் எல்லாம் வல்ல அல்லாஹ் நபி (ஸல்) அவர்களை இப்ராஹீம் (அலை) அவர்களின் மார்க்கத்தைப் பின்பற்றுமாறு கூறுகின்றான்.

“(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!” என்று உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். அவர் இணை கற்பிப்பவராக இருந்ததில்லை. (அல்குர்ஆன் 16:123)

நபி (ஸல்) அவர்கள் முதல் அவர்களது உம்மத்தினர் அனைவருக்கும் இப்ராஹீம் (அலை) அவர்களை அல்லாஹ் முன்மாதிரியாக ஆக்கி வைத்தான்.

“உங்களை விட்டும் அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும் உங்களுக்கு மிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது” என்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. “உங்களுக்காக பாவ மன்னிப்புத் தேடு வேன். அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு எதையும் செய்ய நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை” என்று இப்ராஹீம் தம் தந்தையிடம் கூறியதைத் தவிர. (இதில் அவரிடம் முன்மாதிரி இல்லை) (அல் குர்ஆன் 60:4)

இப்ராஹீம் தம் தந்தைக்காக பாவ மன்னிப்புத் தேடியது, தந்தைக்கு அவர் அளித்த வாக்குறுதியின் காரணமாகவே.

அவர் அல்லாஹ்வின் எதிரி என்பது அவருக்குத் தெரிந்த பின் அதிலிருந்து விலகிக் கொண்டார். இப்ராஹீம் பணிவுள்ளவர்; சகிப்புத் தன்மை உள்ளவர். (அல் குர்ஆன் 9:114)

இணை வைப்பவர்களிடம் இப்ராஹீம் (அலை) அவர்கள் கடைப்பிடித்த அந்தக் கடுமையான அணுகுமுறையை அல்லாஹ் அழகிய முன்மாதிரி என்று கூறுகின்றான். ஆனால் இன்று ஏகத்துவவாதிகள் எனப்படுவோர், இணை வைப்பவர்களிடம் இந்த அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதில்லை. முஸ்லிம் இணைவைப்பாளர்கள், காஃபிர் இணைவைப்பாளர்கள் என்று இரு கூறாகப் பிரித்துப் பார்க்கின்றனர். முஸ்லிம் இணைவைப்பாளர்களை திருமணம் முடிக்கலாம், அவர்களுக்குப் பின்னால் நின்று தொழலாம் என்றெல்லாம் கூறுகின்றார்கள்.

இதற்கு நம்மவர்கள் கூறும் சாக்கும் சமாதானமும், அவர்கள் ஹிதாயத்துக்கு – நேர்வழிக்கு வந்து விடலாம் என்ற வாதம் தான்.

தமது இறைவனின் திருமுகத்தை நாடி காலையிலும், மாலையிலும் தமது இறைவனைப் பிரார்த்திக்கும் மக்களுடன் உம்மைக் கட்டுப்படுத்திக் கொள்வீராக! இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியை நாடி அவர்களை விட்டும் உமது கண்களைத் திருப்பி விடாதீர்! நம்மை நினைப்பதை விட்டும் எவனது சிந்தனையை நாம் மறக்கடிக்கச் செய்து விட்டோமோ, அவனுக்குக் கட்டுப்படாதீர்! அவன் தனது மனோ இச்சையைப் பின்பற்றுகிறான்.

அவனது காரியம் வரம்பு மீறுவதாக உள்ளது. (அல் குர்ஆன் 18:28)

மக்கத்து முஷ்ரிக்குகளின் பிரமுகர்கள் இஸ்லாத்திற்கு வந்து எப்படியேனும் இஸ்லாத்திற்கு வந்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்பிரமுகர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க நினைக்கின்றார்கள். ஆனால் அல்லாஹ் இந்தச் செயலை கண்டிக்கின்றான். இருப்பவர்களுக்கு முக்கியத்துவம் வழங்குவது தான் சரியான செயல் என்று கூறுகின்றான்.

இதே போல் மற்றொரு சந்தர்ப்பத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறைவன் கண்டிக்கின்றான்.

அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் என்ற பார்வையற்ற தோழர் நபிகள் நாயகத்திடம் வந்தார். எனக்கு அறிவுரை கூறுங்கள் என்றார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இணை வைப்பவர்களில் முக்கியப் பிரமுகர் ஒருவர் இருந்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்தப் பார்வையற்ற தோழரைப் புறக்கணித்து விட்டு, முக்கியப் பிரமுகரின் பால் கவனம் செலுத்தினார்கள். “நான் கூறுவதில் தவறு ஏதும் காண்கிறாயா?” என்று அந்தப் பிரமுகரிடம் நபியவர்கள் கேட்க, அவர் இல்லை என்று கூறினார். அப்போது தான் அல்குர்ஆன் 80வது அத்தியாயம் 1 முதல் பத்து வரையிலான வசனங்கள் அருளப்பட்டன. ஆதாரம்: திர்மிதி – 3452, 3328, முஸ்னத் அபூயஃலா – 4848

தன்னிடம் அந்தக் குருடர் வந்ததற்காக இவர் கடுகடுத்தார். அலட்சியம் செய்தார். அவர் தூயவராக இருக்கலாம் என்பது (முஹம்மதே!) உமக்கு எப்படித் தெரியும்? அல்லது அவர் அறிவுரை பெறலாம். அந்த அறிவுரை அவருக்குப் பயன் அளிக்கலாம். யார் அலட்சியம் செய்கிறானோ அவனிடம் வலியச் செல்கிறீர். அவன் பரிசுத்தமாக ஆகாவிட்டால் உம் மீது ஏதும் இல்லை. (இறைவனை) அஞ்சி உம்மிடம் யார் ஓடி வருகிறாரோ அவரை அலட்சியம் செய்கிறீர். (அல் குர்ஆன் 80:1-ரி10)

நபி (ஸல்) அவர்கள் இணை வைப்பவர்களின் பிரமுகர்களுக்கு முக்கியத்துவம் அளித்தது, அவர்கள் இஸ்லாத்தை நோக்கி வந்து விட வேண்டும் என்பதற்காகத் தான்.

ஹிதாயத்துக்கு வந்து விடுவார்களே என்ற எதிர்பார்ப்பு தான் நபி (ஸல்) அவர்களுக்கும் ஏற்பட்டது. ஆனால் இறைவன் அந்த வாதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. இப்போது இஸ்லாத்தில் இருப்பவர்களுக்குத் தான் முக்கியத்துவம் அளிக்கப் பட வேண்டுமே தவிர, முஷ்ரிக்காக இருப்பவர் இஸ்லாத்திற்கு வந்து விடுவார் என்று நினைத்து அவருக்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடாது என்று அல்லாஹ் மேற்கண்ட வசனங்களில் கூறுகின்றான்.

ஆனால் இதை நமது சகோதரர்கள் விளங்கிக் கொள்ளவில்லை. இணை வைப்பில் மூர்க்கமாக நின்று பிரச்சாரம் செய்பவர்களிடம் கூட பெண் எடுக்கத் தயங்குவதில்லை. இது போன்று இன்ன பிற விஷயங்களிலும் இந்த ஹிதாயத் வாதத்தின் அடிப்படையிலேயே இணை வைப்பவர்களிடம் நெருக்கத்தை வைத்திருக்கின்றனர். இதற்கெல்லாம் காரணம், இப்ராஹீம் (அலை) என்ற இமாமை முழுமையாகப் பின்பற்றாதது தான். அல்லாஹ் கூறும் அந்த அழகிய முன்மாதிரியைப் புறக்கணித்தது தான்.

அதற்காக இணை வைப்பவர்களிடம் எப்போதும் மோதல் போக்கைக் கடைப்பிடிக்குமாறு இஸ்லாம் கூறவில்லை. மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும் அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்.

மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடுவோர், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றியோர், உங்களை வெளியேற்றுவதற்கு உதவி புரிந்தோர் ஆகியோரை உற்ற நண்பர்களாக ஆக்குவதையே அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்கிறான்.

அவர்களை உற்ற நண்பர்களாக்கிக் கொள்வோரே அநீதி இழைத்தவர்கள். (அல்குர்ஆன் 60:8,9)

இந்த வசனங்களின் படி மார்க்க விஷயங்களில் நம்முடன் மோதல் போக்கைக் கடைப்பிடிக்காதவர்களுடன் பழகுவதோ அல்லது அவர்களுக்கு நன்மை செய்வதோ தவறில்லை. ஆனால் அவர்களும் இணை வைப்பாளர்கள் என்ற வட்டத்தை விட்டு வெளியே வந்து விட மாட்டார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

-ஷம்சுல்லுஹா

பயணத்தில் கஸர் செய்தல் எத்தனை நாட்கள் இச்சலுகையைப் பயன்படுத்தலாம்? பல வருடங்கள் வெளியூரில் இருப்பவர்கள் இவ்வாறு சுருக்கித் தொழலாமா?

ஒருவர் எத்தனை நாட்கள் பயணத்தில் இருந்தால் ஜம்வு, கஸ்ர் செய்யலாம் என்பதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வரையறை எதுவும் கூறவில்லை. எனவே இத்தனை நாள் தங்கினால் மட்டுமே கஸ்ர் செய்ய வேண்டும்; அதற்கு மேல் தங்கினால...் கஸ்ர் செய்யக் கூடாது என்று கூறுவதற்கு மார்க்கத்தில் யாருக்கும் அதிகாரம் இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (மக்காவில்) பத்தொன்பது நாட்கள் தங்கினார்கள். அந்நாட்களில் கஸ்ர் செய்தார்கள். நாங்களும் பத்தொன்பது நாட்களுக்குப் பிரயாணம் செய்தால் கஸ்ர் செய்வோம். அதிகமானால் முழுமையாகத் தொழுவோம்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி); நூல்: புகாரி 1080


இந்த ஹதீஸில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்தொன்பது நாட்கள் தான் கஸ்ராகத் தொழுதுள்ளார்கள் என்பதால் அதற்கு மேல் தங்குபவர்கள் முழுமையாகத் தொழ வேண்டும் என்று சிலர் வாதிடுகின்றனர். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கூற்றை இதற்கு ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

ஆனால் பத்தொன்பது நாட்களுக்கு மேல் முழுமையாகத் தொழுவோம் என்பது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் சொந்தக் கூற்றாகவே கூறப்பட்டுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெளியூரில் அதிகப்பட்சமாகத் தங்கியது பத்தொன்பது நாட்கள்; அவர்கள் தங்கிய அத்தனை நாட்களிலும் சுருக்கித் தொழுதுள்ளார்கள் என்பதைத் தான் இந்த ஹதீஸிலிருந்து விளங்க முடியும்.

அதற்கு மேல் தங்கினால் சுருக்கித் தொழக் கூடாது என்றால் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியிருப்பார்கள். அவ்வாறு வரையறை எதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறாததிலிருந்து, இதற்குக் காலவரை இல்லை என்பதை அறியலாம்.
அதே சமயம் வெளியூரில் தங்குபவர்கள் சுருக்கித் தொழுவது கட்டாயமில்லை. ஒருவர் விரும்பினால் முழுமையாகத் தொழுவதற்குத் தடையில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் மதீனாவிலிருந்து மக்கா நோக்கி உம்ரா செய்யப் புறப்பட்டேன். நான் மக்காவை அடைந்த போது, 'அல்லாஹ்வின் தூதரே! எனது தாயும், தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். நீங்கள் கஸ்ர் செய்கிறீர்கள்; நான் முழுமையாகத் தொழுகிறேன். நீங்கள் நோன்பு நோற்கவில்லை; நான் நோன்பு நோற்கிறேன்' என்று நான் கேட்ட போது 'ஆயிஷாவே! சரியாகச் செய்தாய்!' என்றார்கள். என்னைக் குறை காணவில்லை.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி); நூல்: நஸயீ 1439


ஒருவர் எத்தனை நாட்கள் பயணத்தில் இருந்தால் ஜம்வு, கஸ்ர் செய்யலாம் என்பதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வரையறை எதுவும் கூறவில்லை.
ஒருவர் உள்ளூரில் இருக்கும் போதும் எப்போதாவது ஜம்வு செய்து (சேர்த்துத்) தொழுவதற்கு அனுமதி உள்ளது. எனினும் இதையே வழக்கமாக்கிக் கொள்ளக் கூடாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் லுஹ்ரையும், அஸ்ரையும், மஃரிபையும், இஷாவையும் ஏழு, எட்டு ரக்அத்களாகத் தொழுதார்கள்.
அறிவிப்பவர்: இப்னுஅப்பாஸ் (ரலி); நூல்: புகாரீ 543

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் லுஹ்ரையும் அஸ்ரையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள். மஃரிபையும் இஷாவையும் ஒரே நேரத்தில் தொழுதார்கள். அப்போது (போர் அபாயம் மிகுந்த) அச்ச நிலையிலோ, பயணத்திலோ அவர்கள் இருக்கவில்லை.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி); நூல்: முஸ்லிம் 1267


இந்த ஹதீஸை அடிப்படையாகக் கொண்டு காலமெல்லாம் உள்ளூரில் ஜம்வு செய்யலாம் என்று யாரும் புரிந்து கொள்வதில்லை. எப்போதாவது சில நேரங்களில் உள்ளூரில் ஜம்வு செய்யும் நிலை ஏற்படலாம். அது போன்ற நேரங்களில் இச்சலுகையைப் பயன்படுத்திக் கொள்கிறோம். எல்லா நேரத்திலும் ஒருவர் இச்சலுகையைப் பயன்படுத்தி வந்தால் அவரைப் பொருத்தவரை காலமெல்லாம் மூன்று வேளைத் தொழுகையாகி விடும்.

இந்தச் சலுகையைப் புரிந்து கொள்வது போல் மாதக் கணக்கில் வெளியூரில் இருப்பவர்கள் அன்றாடம் இச்சலுகையைப் பயன்படுத்தாமல் அரிதாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஏனெனில் தொடர்ந்து ஜம்வு செய்து வந்தால் தொழுகை குறிப்பிட்ட நேரத்தில் தொழ வேண்டும் என்ற இறைவனின் கட்டளைக்குப் பொருள் இல்லாமல் போய்விடும்.


நன்றி http://www.onlinepj.com/

27 April 2011

நட்பு

நண்பர்கள் பற்றி இஸ்லாம் கூறுவது என்ன?
முகஸ்துதிக்காக பழகினால் என்ன செய்யலாம்?
உண்மையான நட்பு எது?
அழகிய முறையில் நட்பு கொள்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நன்மையான காரியம் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

மலர்ந்த முகத்துடன் உனது சகோதரனை நீ சந்திப்பது உட்பட எந்த நல்ல காரியத்தையும் அற்பமாக நினைத்து விடாதே என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி); நூல்: முஸ்லிம் (4760)
நல்ல நண்பனைத் தேர்வு செய்வதற்கு முன்னால்:
ஒரு நல்ல நண்பனை நாம் தேர்வு செய்வதற்கு முன்னால் நம்மை நாம் நல்லவனாக மாற்றிக் கொள்வதற்கு முயற்சிக்க வேண்டும். ஏனென்றால் நம்மிடத்தில் நல்ல பண்புகள் இருந்தால் தான் நல்லவர்கள் நம்மிடம் பழகுவார்கள். இனம் இனத்தைச் சாரும் என்ற அடிப்படையில் நல்லவர்கள் நல்லவர்களுடன் தான் நட்பு வைப்பார்கள். இதனால் தான் மோசமான குணம் உள்ளவர்களிடம் அது போன்ற குணம் உள்ளவர்கள் தான் அண்டுவார்களே தவிர நற்குணம் படைத்தவர்கள் அண்டுவதில்லை. இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வரும் ஹதீஸில் சுட்டிக் காட்டுகிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் உயிர்கள் பல்வேறு வகைப்பட்டவை ஆகும். அவற்றில் ஒன்றுக்கொன்று (குணத்தால்) ஒத்துப் போகின்றவை பரஸ்பரம் பழகுகின்றன. ஒன்றுக்கொன்று (குணத்தால்) வேறுபட்டிருப்பவை பரஸ்பரம் முரண்பட்டு (விலகி) நிற்கின்றன.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி); நூல்: புகாரி (3336)

நல்லவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுதல்:
பூவோடு சேர்ந்தால் நாரும் மணக்கும் என்று கூறுவார்கள். நாம் பழகும் நண்பர்களைப் பொறுத்து நமது நிலை மாறுகிறது. எனவே நம்முடைய இரு உலக வாழ்க்கையும் சிறப்புடன் விளங்க நல்ல நண்பர்களைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும். இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழகான உதாரணத்தைக் கூறி விளக்கியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நல்ல நண்பனுக்கும் தீய நண்பனுக்கும் உதாரணம் கஸ்தூரி வைத்திருப்பவரும் கொல்லனின் உலையுமாகும். கஸ்தூரி வைத்திருப்பவரிடமிருந்து உமக்கு ஏதும் கிடைக்காமல போகாது. நீர் அதை விலைக்கு வாங்கலாம். அல்லது அதன் நறுமணத்தையாவது பெற்றுக் கொள்ளலாம். கொல்லனின் உலை உமது வீட்டையோ அல்லது உனது ஆடையையோ எரித்துவிடும். அல்லது அவனிடமிருந்து கெட்ட வாடையை நீர் பெற்றுக் கொள்வீர்.
அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி); நூல்: புகாரி (2101)

தீயவர்களுடைய நட்பு நம்முடைய மறுமை வாழ்வை எரித்து நாசப்படுத்திவிடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மேலுள்ள ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள். வீணர்களுடைய சகவாசத்தால் மறு உலக வாழ்கையைத் தொலைத்தவர்களின் புலம்பல்களை இறைவன் பின்வரும் வசனத்தில் எடுத்துரைக்கிறான்.

குற்றவாளிகளிடம் "உங்களை நரகத்தில் சேர்த்தது எது?'' என்று விசாரிப்பார்கள். "நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை'' எனக் கூறுவார்கள். (வீணில்) மூழ்கியோருடன் மூழ்கிக் கிடந்தோம். (74:45)

நல்ல நண்பன் நம்முடன் இருந்தால் தவறு செய்ய நாம் முற்பட்டாலும் நல்லதை நமக்கு விளக்கிச் சொல்லி அதில் விழவிடாமல் நம்பை பாதுகாத்து விடுவான். நபிமார்கள் நல்வழியை மக்களுக்குப் போதிப்பதற்காக வந்தார்கள். அவர்களை இப்பணியில் தூண்டிவிடுவதற்காக அல்லாஹ் அவர்களுக்கென்று ஒரு நண்பரை ஏற்படுத்தியுள்ளான். நபிமார்களுக்கே நல்ல நண்பர் தேவைப்படுகிறார் என்றால் நிச்சயமாக நாம் அனைவரும் நல்லவர்களை நண்பர்களாகப் பெற்றிருக்க வேண்டும்.

அல்லாஹ் எந்த ஒரு இறைத்தூதரை அனுப்பினாலும் இன்னும் எந்த ஒரு ஆட்சித் தலைவரை நியமித்தாலும் அவருக்கு நெருக்கமான இரு ஆலோசகர்கள் இருப்பார்கள். ஒரு ஆலோசகர் நன்மையை செய்யும் படி அவரை ஏவி தூண்டுவார். மற்றொருவர் தீமை செய்யும் படி அவரை ஏவி தூண்டுவார். அல்லாஹ் (குற்றங்களிலிருந்து) யாரைப் பாதுகாத்தானோ அவரே மாசற்றவராக இருப்பார்.
அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி); நூல்: புகாரி (7198)

அல்லாஹ்விற்காக நட்புவைத்தல்:
பெரும்பாலான நண்பர்கள் வீணாகப் பேசுவது, ஊர் சுற்றுவது, திரையரங்குகளுக்குச் செல்வது போன்ற தீய காரியங்களில் ஒன்றுபடுகிறார்கள். அனைவரும் அல்லாஹ்வுடைய மார்க்கம் மேலோங்குவதற்காக ஒன்று கூடுவது அரிதிலும் அரிதாகி விட்டது. இஸ்லாத்தைப் பரப்புவதற்காக அறிமுகமில்லாத பலரிடம் சென்று தன்னை அறிமுகப்படுத்தி நட்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இறைவனுக்காக நட்புவைத்தவர்களுக்கு ஏராளமான சிறப்புகள் இருப்பதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் அல்லாஹ்விற்காக நேசிக்கிறாரோ அல்லாஹ்விற்காக வெறுக்கிறாரோ அல்லாஹ்விற்காக கொடுக்கிறாரோ அல்லாஹ்விற்காக கொடுக்காமல் இருக்கிறாரோ அவர் ஈமானை பூரணப்படுத்திக் கொண்டார்.
அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி) அவர்கள்; நூல்: அபூதாவுத் (4061)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் வேறொரு ஊரில் இருக்கும் தன் சகோதரனைச் சந்திப்பதற்காக ஒருவர் சென்றார். அவர் செல்லும் வழியில் ஒரு வானவரை அல்லாஹ் அவரிடத்தில் அனுப்பினான். அந்த வானவர் அவரிடத்தில் வந்த போது நீங்கள் எங்கே செல்ல நினைக்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு அவர் இந்த ஊரில் உள்ள எனது சகோதரனை (சந்திக்க) நாடிச் செல்கிறேன் என்று கூறினார். உங்களுக்கு சொந்தமான எதையாவது அவர் உங்களுக்கு தர வேண்டியுள்ளதா என்று வானவர் கேட்டார். அதற்கு அவர் இல்லை. கண்ணியமானவனும் சங்கையானவனுமான அல்லாஹ்விற்காக அவரை நேசிக்கிறேன் என்று கூறினார். அந்த வானவர் நீங்கள் யாருக்காக அவரை நேசித்தீர்களோ அவன் உங்களை நேசிக்கிறான் என்பதை உங்களிடம் (கூற வந்த) அல்லாஹ்வின் தூதராவேன் நான் என்று கூறினார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி); நூல்: முஸ்லிம் (4656)

என் விஷயத்தில் ஒருவருக்கொருவர் நேசித்துக் கொள்பவர்களுக்கும் என் விஷயத்தில் அமர்பவர்களுக்கும் என் விஷயத்தில் போட்டி போட்டுக் கொண்டு செலவு செய்பவர்களுக்கும் எனது பிரியும் உறுதியாகி விட்டது என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஆத் (ரலி); நூல்: அஹ்மத் (21114)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் மறுமை நாளில் எனக்காக நேசம் வைத்துக் கொண்டவர்கள் எங்கே? என்னுடைய நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத இந்நாளில் நான் அவர்களுக்கு எனது நிழலைத் தருகிறேன் என்று கூறுவான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி); நூல்: முஸ்லிம் (4655)

உதவும் நண்பனே உண்மையான நண்பன்:

நாம் வசதி வாய்ப்புகளுடன் வாழும் போது நமக்கு ஏராளமான நண்பர்கள் கிடைப்பார்கள். ஆனால் கஷ்டங்கள் வரும் போது அனைவரும் ஓடி விடுவார்கள். இவர்கள் உண்மையான நண்பர்கள் அல்ல. நாம் சிரமப்படும் போதும் நமக்கு உதவி செய்பவர்களே உண்மையான நண்பர்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : தனக்கு விரும்புவதை தன்னுடைய சகோதரனுக்கு விரும்பாதவரை உங்களில் எவரும் ஈமான் கொண்டவராக ஆகமுடியாது.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி); நூல்: புகாரி (13)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான். அவனை (பிறரது அநீதிக்கு ஆளாகுமாறு) கைவிட்டு விடவும் மாட்டான். எவர் தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கின்றாரோ அவரது தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கின்றான். எவர் ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகின்றாரோ அவரை விட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகின்றான். எவர் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கின்றாரோ அவரது குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கின்றான்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி); நூல்: புகாரி (2442)

நன்மையை ஏவி தீமையைத் தடுக்க வேண்டும்:
தீமையான காரியங்களில் நன்பனுக்க ஒத்துப் போவது கூடாது. நன்பன் நன்மையான காரியங்களைச் செய்ய மறந்து விட்டால் உண்மை நன்பன் அவனுக்கு ஞாபகமூட்ட வேண்டும். நண்பன் தொழ மறந்து விட்டால் இதை அவனிடத்தில் தெரியப்படுத்தி அவனை தொழ வைக்க வேண்டும். நண்பன் நல்ல காரியங்களைச் செய்தால் அவனுடன் சேர்ந்து நாமும் செயல்பட வேண்டும். பின்வரும் நபிமொழிகள் நண்பர்கள் ஒருவரையொருவர் சீர்படுத்திக் கொள்ள வேண்டும் என்று உணர்த்துகிறது.

03 April 2011

கண்டெடுக்கப்பட்ட பொருளை என்ன செய்யலாம்?

பிறர் தவற விட்ட பொருளை ஒருவர் கண்டெடுத்தால் அவர் ஒரு வருட காலம் மக்களிடம் விளம்பரம் செய்ய வேண்டும். விளம்பரம் செய்யாமல் அதை வைத்துக் கொள்ளக் கூடாது. ஒரு வருட காலம் அறிவிப்புச் செய்தும் யாரும் வராவிட்டால் எடுத்தவரே அப்பொருளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். 


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
கண்டெடுக்கப்பட்ட பொருளைப் பற்றி அறிவிப்புச் செய்யாமல் அதைத் தம்மிடம் வைத்துக் கொண்டிருப்பவர் வழிகேட்டிலேயே உள்ளார்.
அறிவிப்பவர் : ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி)
நூல்: முஸ்லிம் (3556)


நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் (வந்து), பாதையில் கண்டெடுக்கப்பட்ட (பிறர் தவறவிட்ட) பொரு(ளின் சட்டங்க)ளைப் பற்றிக் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "அதன் முடிச்சை' அல்லது "அதன் பையையும் அதன் உறையையும்' (அதாவது அதன் முழு விவரங்களை) நீ அறிந்து வைத்துக் கொள்! பிறகு ஓராண்டுக் காலம் அதனைப் பற்றி விளம்பரப்படுத்து! அதற்குப் பிறகு அதனை நீ பயன்படுத்திக் கொள்! அதன் உரிமையாளர் (முறைப்படி அதைக் கேட்டு) வந்து விட்டால் அதை அவரிடம் கொடுத்துவிடு!'' என்றார்கள்.
அறிவிப்பவர் : ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி)
நூல்: புகாரி (91)


பாதையில் கண்டெடுக்கப்பட்ட பொருள் குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. மக்கள் நடமாட்டமுள்ள பாதையிலோ அல்லது மக்கள் புழக்கமுள்ள ஊரிலோ கண்டெடுக்கப்பட்டிருந்தால் ஒரு வருட காலம் அதைப் பற்றி நீர் அறிவிப்புச் செய்ய வேண்டும். அதைத் தேடி எவரேனும் வந்தால் அவரிடம் அதை நீர் ஒப்படைக்க வேண்டும். வரா விட்டால் அது உனக்குரியதாகும்.
 

(எவருக்கும் சொந்தமில்லாத புறம்போக்கான) தரிசு நிலத்தில் கண்டெடுக்கப்பட்டவற்றிலும் புதையலிலும் ஐந்தில் ஒரு பங்கு (வரி) உண்டு. அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி)
நூல்: நஸாயீ (2448)


பொருளைத் தவற விட்டவர் அதைத் தேடி வராத வகையில் கண்டெடுக்கப்பட்ட பொருள் அற்பமானதாக இருந்தால் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு வருட காலம் அறிவிப்புச் செய்து காத்திருக்க வேண்டியதில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாதையில் கிடந்த ஒரு பேரீச்சம் பழத்தைக் கடந்து சென்றார்கள். "இது சதகா(தர்ம)ப் பொருளாக இருக்குமோ என்ற அச்சம் எனக்கில்லாவிட்டால் இதை நான் சாப்பிட்டிருப்பேன்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி (2431)


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எடுத்த பேரீச்சம் பழம் தர்மப் பொருளாக இருக்க வாய்ப்புள்ளது என்பதால் அதை உண்ணாமல் விட்டு விட்டார்கள். இல்லையென்றால் அதை உண்டிருப்பார்கள்.

எனவே இது போன்ற அற்பப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டால் அவற்றை பயன்படுத்திக் கொள்வது தவறல்ல.



Source: www.onlinepj.com

செல்போனில் குர்ஆன் வசனங்களை ரிங் டோனாக வைத்துக் கொள்ளலாமா?

சவூதி உலமாக்கள் சிலர் இது கூடாது என்று ஃபத்வா கொடுத்துள்ளனர். ஆனால் கூடாது என்பதற்கு இவர்கள் கூறும் காரணம் ஏற்கத் தக்கதல்ல.

ரிங் டோனாக குர்ஆன் வசனம் இருந்தால் போன் அழைப்பை ஏற்கும் போது குர்ஆனை இடையில் நிறுத்தும் நிலை ஏற்படும் என்பதைத் தான் இதற்குக் காரணமாகக் கூறுகின்றனர் இது குர்ஆனை அவமதிப்பதாகும் என்று கூறுகின்றனர்.

குர்ஆன் ஓதிக் கொண்டிருப்பவர் தேவை ஏற்படும் போது இடையில் நிறுத்தக் கூடாது என்று ஏதாவது ஆதாரம் இருந்தால் இவர்களின் வாதத்தை ஏற்கலாம். தொழுகையை இடையில் நிறுத்தக் கூடாது என்று தடை உள்ளது போல் குர்ஆன் ஓதுவதை தேவைப்படும் போது இடையில் நிறுத்தக் கூடாது என்று தடையேதும் இல்லாத போது இவர்கள் கூறும் காரணம் ஏற்கத் தக்கதல்ல.

நாம் குர்ஆனை ஓதிக் கொண்டிருக்கும் போது ஒருவர் கதவைத் தட்டுகிறார் என்றால் குர்ஆன் ஓதுவதை நிறுத்தி விட்டு கதவைத் திறக்கலாமா என்றால் திறக்கலாம் என்று தான் இவர்களே கூறுவார்கள். இதனால் குர்ஆனை அவமதித்து விட்டார் என்று ஆகாது. ஒருவர் ஒரு தேவைக்காக நம்மைத் தொடர்பு கொள்ளும் போது அதற்குப் பதிலளிப்பது என்பது குர்ஆன் கற்றுத் தரும் பண்பாட்டுக்கு ஏற்றது தான்.

நாம் குர்ஆன் ஓதும் போது ஒருவர் நமக்கு ஸலாம் கூறினால் ஓதுவதை நிறுத்தி விட்டு பதில் சொல்ல வேண்டும். இது குர்ஆனை அவமதித்ததாக ஆகாது.

ஒரு முஸ்லிமிடம் இருக்க வேண்டிய நற்பண்புகளைக் கடைப்பிடிப்பதற்காக குர்ஆனை இடையில் நிறுத்துவது எந்த வகையிலும் குர்ஆனை அவமதித்ததாக ஆகாது. குர் ஆன் வழிகாட்டுதலை மதித்தததாகத் தான் ஆகும். இடையில் நிறுத்தக் கூடாது என்று கட்டளை இருந்தால் மட்டுமே அது குர்ஆனை அவமதித்ததாக ஆகும்.

தொலை பேசியில் வரும் ரிங் டோனும் ஒரு அழைப்பு தான். அந்த அழைப்புக்குப் பதில் சொல்வதற்காக நாம் ரிங் டோனை நிறுத்துகிறோமே தவிர குர்ஆனை அவமதிப்பதற்காக அல்ல.
பாடல்களும் இசையும் மார்க்கத்தில் தடை செய்யப்பட்டிருக்கும் போது அதைத் தவிர்க்க வேண்டுமே என்ற இறையச்சத்தின் காரணமாகவே அதிகமானோர் குர்ஆனை ரிங் டோனாக வைத்துக் கொள்கின்றர். இந்த ஃப்தவாவினால் மீண்டும் பாடல்களை ரிங் டோனாக மாற்றும் நிலைக்குத் தள்ளுகின்றனர்.

கழிவறைக்கு செல் போனை எடுத்துச் செல்லலாமா?

குரான் வசனம் சுமந்து கொண்டு அவர்கள் கழிவறை செல்வதும் உண்டு. எனவே குரான் வசனம் அப்போதும் ரிங் டோன் போன்றே இசைக்கும். குரான் வசனங்கள் கழிவறையில் பயன்படுத்தலாமா?.

இப்போது அதிகமான மக்கள் பயன்படுத்தக் கூடிய செல் போன்களில் குர்ஆன் டெக்ஸ்ட் குர் ஆன் அரபி மூலம் மார்க்க நூல்கள், பயான்கள் ஆகியவை பதிவு செய்யக்கூடிய வகையில் தான் உள்ளன. மார்க்க ஆர்வமுள்ளவர்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இவர்கள் கழிவறை சென்றால் என்ன செய்ய வேண்டும்? இவர்களின் செல்போனுக்குள் குர்ஆன் உள்ளதால் அதைக் கழிவறைக்குள் கொண்டு செல்லாமல் இருக்க வேண்டும் என்று ஒருவர் முடிவு செய்தால் அது போல் குர்ஆன் ரிங்டோனாக வைத்திருப்பவரும் செல் போனை கழிவறைக்குள் கொண்டு செல்லாமல் தவிர்க்கலாம்.

அல்லது வெளியே வைக்க முடியாத நிலை இருந்தால் கழிவறை செல்லும் போது போனை ஆப் செய்து விடலாம்.

கழிவறை செல்லும் போது குர்ஆன் ஒலிக்கும் என்பதால் குர்ஆனை ரிங் டோனாக வைக்கக் கூடாது என்றால் குர்ஆன் சாப்ட்வேர் பதிவிறக்கம் செய்யப்பட்ட செல் போனையும் பயன்படுத்தக் கூடாது என்று கூற வேண்டும். ஆனால் குர்ஆனை ரிங் டோனாக வைக்கக் கூடாது எனக் கூறுவோர் குர் ஆன் சாப்ட்வேர் விஷயத்தில் இப்படி கூறுவதில்லை. கழிவறை செல்லும் அவசியம் உள்ளதால் குர்ஆன் சாப்ட்வேர் உள்ள போனை பயன்படுத்தக் கூடாது என்று இவர்கள் கூறுவதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.


Source: www.onlinepj.com