17 May 2011

பிரார்த்தனை!

படைத்த இரட்சகனை படைப்பினங்கள் நெருங்குவதற்குண்டான ஒரு வழிமுறை!தன் தேவைகளை தன்னைப் படைத்த ஏக இறைவனிடமே படைப்பினங்கள் கேட்டு பெறும் கண்ணியமிக்க வாழ்வியல் முறை!

தவறுகளிலும் பாவங்களிலும் தடுமாறி விழும் மனித இனம் தன்னைப் பரிசுத்தப்படுத்திக் கொள்ள இறைவனால் அருளப்பட்டிருக்கும் இலகுவான வணக்க முறையே பிரார்த்தனை என்பது. பிரார்த்தனை என்றதும் மனம் போன போக்கில் மன்றாடுவதும் புலம்புவதுமல்ல: அதற்கென்று கண்ணியமிக்க வழி முறையையும் வார்த்தைகளையும் அல்லாஹ்வின் மார்க்கம் நமக்கு சொல்லித் தருகிறது.


மனிதர்களின் எண்ணங்களையும் நோக்கங்களையும் மார்க்கம் முறைப்படுத்துகிறது. சொற்ப பலா பலன்களுக்கு மனிதர்கள் தங்கள் வாழ்வை சொதப்பி விடாமல் நிரந்தர நன்மைகளுக்கு மனிதனை சிந்தனை ரீதியாக, உளரீதியாக சித்தப்பட செய்கிறது.

படைப்பினங்களால் கேட்கப்படுபவனும் அவைகளுக்கு கொடுப்பவனும் எவ்வித சுயதேவைகளற்றவனாகவும் சர்வ வல்லமை பெற்றவனாகவும் எதிர்கால ஞானம் நிறைந்தவனாகவும் இருக்க வேண்டுமென இஸ்லாம் அறிவுறுத்துகிறது.
அத்தகைய வல்லமையும் ஆற்றலும் தன் ஒருவனுக்கு மட்டுமே இருப்பதை அல்லாஹ் உணர்த்துகிறான். மரித்து போனபின் பிண்டங்களுக்கும், கல்லுக்கும் மண்ணுக்கும் தன்னைப் போன்றே தேவைகள் இருக்கக் கூடிய சக மனிதனுக்கும் பிறர் கேட்பதை நிறைவேற்றித் தரும் ஆற்றல் இல்லை. அவைகளுக்குக் கேட்கும் திறனுமில்லை. அவைகளிடம் கேட்பது கொடும் பாவமும் நஷ்டமுமாகும் என மார்க்கம் எச்சரிக்கிறது.


அல்லாஹ்விடம் மட்டுமே பிரார்த்திக்க வேண்டுமெனமும் தன்னிடம் மட்டுமே கேட்பதை அல்லாஹ் விரும்புவதாகவும் ஆகவே துஆ ஒரு வணக்கமாகும் என்பதையும் இஸ்லாம் அறிவுறுத்துகிறது.

மனிதனின் தேவைகள் மறுமையை அடிப்படையாகக் கொண்டதாகவும் அதற்கான அனுகூலங்கள் இம்மையில் நிறைந்ததாக இருக்க இறைவனிடம் பிரார்த்திக்குமாறு இறைமார்க்கம் கற்றுத் தருகிறது.   நோக்கங்கள் உயர்வானதாக வழிமுறைகள் தூய்மையானதாக இருந்திட வல்லோனின் மார்க்கம் வலியுறுத்துகிறது. அப்போதுதான் மனக்குழப்பங்களும் மனித தொல்லைகளும் மறுமையை நோக்கிய பயணத்திற்கு இடந்தராது.இதயம் தெளிவாகும். எல்லாப்பிரச்னைகளும் லேசாகும். இஹ்லாஸ் என்ற தூய்மையான பந்தம் இறைபக்தியில் ஏற்பட்டு வலுவாகும்.   அதுவே இன்ஷாஅல்லாஹ் இம்மை மறுமை வெற்றி களுக்கு வழிகோலும். அதற்கான முதல் ஆதாரங்களாக மகத்தான இரட்சகன் அல்லாஹ் அருளிய திருக்குர்ஆனில் இருந்து பிரார்த்தனைகளை சமுதாயத்தின் கவனத்துக்குக்  தருகிறோம்.

إيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ  وَلَا الضَّالِّينَ

"(இறைவா) உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே உதவியும் தேடுகிறோம். நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக! (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல. நெறி தவறியோர் வழியுமல்ல." (அல் குர்ஆன்: 1:5-7)

"எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய். எங்களை மன்னிப்பாயாக! நீயே நிச்சயமாக மிக்க மன்னிப்போனும் அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்." (அல் குர்ஆன்: 2:127-128).

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
 
"ரப்பனா! எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக! மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக! இன்னும் எங்களை (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!" (அல் குர்ஆன்: 2:201)

رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِين

"எங்கள் இறைவா! எங்களுக்கு பொறுமையைத் தந்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாய! காஃபிரான இம்மக்கள் மீது (நாங்கள் வெற்றியடைய) உதவி செய்வாக!" (அல் குர்ஆன்: 2:250)

سَمِعْنَا وَأَطَعْنَاغُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ

"எங்கள் இறைவனே! (உன் வசனங்களை) செவிமடுத்தோம். (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிபட்டோம்.எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்.மீளுவதும் உன்னிடமே தான்" (அல் குர்ஆன்: 2:295)

رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَاأَنتَ مَوْلَانَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ

"எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் எங்கள் சக்திக்காப்பாற்ப்பட்ட சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன். காஃபிரான கூட்டத்தாரின் மீது எங்களுக்கு உதவி செய்வாயாக!" (அல் குர்ஆன்: 2:286)

رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ

"எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர்வழி காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே!இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு நல்லருள் அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்!" (அல் குர்ஆன்: 3:8)

 رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ

"எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கைகொண்டோம்; எங்களுக்கர்க எங்கள பாவங்களை மன்னித்தருள்செய்வாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக!" (அல் குர்ஆன்: 3:16)

اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَن تَشَاءُ وَتَنزِعُ الْمُلْكَ مِمَّن تَشَاءُ وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُبِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

"அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்; நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்; நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன அனைத்துப்பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்." (அல் குர்ஆன்: 3:26)

رَبِّ هَبْ لِي مِن لَّدُنكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ

"இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் விமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்." (அல் குர்ஆன்: 3:38)

رَبَّنَا آمَنَّا بِمَا أَنزَلْتَ وَاتَّبَعْنَا الرَّسُولَ فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ

"எங்கள் இறைவனே! நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம், (உன்னுடைய) இத்தூதரை நாங்கள் பின்பற்றுகிறோம்; எனவே எங்களை (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன் சேர்த்து எழுதுவாயாக!" (அல் குர்ஆன்: 3:53)

رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ

"எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறிச் செய்தவற்றையும் மன்னித் தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாய் இருக்கச் செய்வாயாக! காஃபிர்களின் கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு நீ உதவி புரிவாயாக." (அல் குர்ஆன்: 3:147)

رَبَّنَا مَا خَلَقْتَ هَٰذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ رَبَّنَا إِنَّكَ مَن تُدْخِلِ النَّارَ فَقَدْ أَخْزَيْتَهُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ رَّبَّنَا إِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُنَادِي لِلْإِيمَانِ أَنْ آمِنُوا بِرَبِّكُمْ فَآمَنَّا رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الْأَبْرَارِ  رَبَّنَا وَآتِنَا مَا وَعَدتَّنَا عَلَىٰ رُسُلِكَ وَلَا تُخْزِنَا يَوْمَ الْقِيَامَةِ إِنَّكَ لَا تُخْلِفُ الْمِيعَادَ

"எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை; நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!’. ‘எங்கள் இறைவனே! நீ எவரை நரக நெருப்பில் புகுத்துகின்றாயோ அவரை நிச்சயமாக நீ இழிவாக்கிவிட்டாய்; மேலும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவருமிலர்!’. ‘எங்கள் இறைவனே! உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் திடமாக ஈமான் கொண்டோம்; எங்கள் இறைவனே! எங்களுக்கு, எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக் இன்னும், எங்க(ளுடைய ஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக!"

"எங்கள் இறைவனே!இன்னும் உன் தூதர்கள் மூலமாக எங்களுக்கு நீ வாக்களித்ததை எங்களுக்குதஷ தந்தருள்வாயாக! கியாம நாளில் எங்களை இழிவுபடுத்தாது இருப்பாயாக! நிச்சயமாக நீ வாக்குறுதிகளில் மாறுபவன் அல்ல." (அல் குர்ஆன்: 3:191-194)

رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ
 
"எங்கள் இறைவனே! நாங்கள் (இவ் வேதத்தின் மீது) நம்பிக்கை கொண்டோம்; எனவே, (இவ்வேதம் சத்தியமானது என்று,) சாட்சி சொல்வோருடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக!" (அல் குர்ஆன்: 5:83)

رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ

"எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் – நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால்,நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்." (அல் குர்ஆன்: 7:23)

رَبَّنَا افْتَحْ بَيْنَنَا وَبَيْنَ قَوْمِنَا بِالْحَقِّ وَأَنتَ خَيْرُ الْفَاتِحِينَ

"எங்கள் இறைவா! எங்களுக்கும், எங்கள் கூட்டத்தாருக்குமிடையே நியாயமான தீர்ப்பு வழங்குவாயாக – தீர்ப்பளிப்பவர்களில் நீயே மிகவும் மேலானவன்." (அல் குர்ஆன்: 7:89)

رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَتَوَفَّنَا مُسْلِمِينَ

"எங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமையையும் (உறுதியையும்) பொழிவாயாக் முஸ்லிம்களாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக எங்களை ஆக்கி) எங்க(ள் ஆத்மாக்க)ளைக் கைப்பற்றிக் கொள்வாயாக!" (அல் குர்ஆன்: 7:126)

لَئِن لَّمْ يَرْحَمْنَا رَبُّنَا وَيَغْفِرْ لَنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ

"எங்கள் இறைவன் எங்களுக்குக் கிருபை செய்து எங்களை மன்னிக்கா விட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்." (அல் குர்ஆன்: 7:149)

وَاكْتُبْ لَنَا فِي هَٰذِهِ الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ

"இவ்வுலகத்திலும், மறுமையிலும் எங்களுக்கு (அழகிய) நன்மைகளையே விதித்தருள்வாயாக! நிச்சயமாக நாங்கள் உன்னையே முன்னோக்குகிறோம்." (அல் குர்ஆன்: 7:156)

حَسْبِيَ اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ  وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ

"எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். (வழிபடுவதற்குரிய) நாயன் அவனையன்றி (வேறுயாரும்) இல்லை; அவன் மீதே நான் பரிபூரண நம்பிக்கை கொண்டுள்ளேன் – அவன் தான் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதி." (அல் குர்ஆன்: 9:129)

عَلَى اللَّهِ تَوَكَّلْنَا رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّلْقَوْمِ الظَّالِمِينَ

"நாங்கள் அல்லாஹ்வையே பூரணமாக நம்பி (அவனிடமே எங்கள் காரியங்களை ஒப்படைத்து)க் கொண்டோம். எங்கள் இறைவனே! அநியாயம் செய்யும் மக்களின் சோதனைக்கு எங்களைஆளாக்கிவிடாதே!" (அல் குர்ஆன்: 10:85)

11 May 2011

இறைவனுக்கு உள்ள இலக்கணம்!

மதங்கள் என்பது இறை நம்பிக்கையை மையமாக வைத்தே தோற்றம் பெற்றுள்ளது. இன்று உலகில் கடவுள் நம்பிக்கையற்ற ஒரு மதத்தையேனும் காணமுடியவில்லை. ஒவ்வொரு மதத்தினரும் தத்தமது வேதநூல்களாகக் கருதும் அந்த மத வழிகாட்டிகளை வைத்தே கடவுள் நம்பிக்கையையும், கடவுளுக்கு இருக்க வேண்டிய பண்புகளையும் குறிப்பிட்ட அந்த மதத்தோடு பின்னிப் பினைந்துள்ளனர்.

இஸ்லாம் தவிர்ந்த இதர அனைத்து மதங்களும் பல தெய்வ வழிபாட்டையும், ஏக இறைவனுக்கு இணைகற்பிக்கும் மன்னிக்க முடியா குற்றத்தை தூண்டுவனவாகவே உள்ளன. நாம் இப்படிக் கூறும் போது சிலருக்குக் கோபம் வரலாம். இது தவிர்க்க முடியாத ஒன்றாகும். இருந்தாலும் நம்மை சத்தியத்தை விட்டும் தடுத்துக் கொண்டிருக்கும் அந்தக் கோபத்தை சிறிது நேரம் ஓரங்கட்டிவிட்டு நாம் கூறும் கருத்துக்களை சற்று சிந்தித்துப் பாருங்கள் உண்மையை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.

எல்லா மதங்களும் கடவுளின் தன்மையைப் பற்றி விளக்கினாலும் போதிய கடவுளின் இலக்கணங்கள், பண்புகள் பற்றி சரியாகக் குறிப்பிடாமை தான் சில மதங்களில் கோடிக்கணக்கான கடவுள் நம்பிக்கையும், வழிபாட்டு முறையும் தன்னகத்தே ஏற்படுத்தியுள்ளன. போதாமைக்கு நாளுக்கு நாள் இன்னும் பல கடவுளர்கள் புதிது புதிதாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தோன்றிக் கொண்டிருக்கின்றனர். அத்தோடு தாங்கள் கடவுளின் அவதாரம் என்று கூறிக் கொண்டு அப்பாவி மக்களை ஏமாற்றிக் கொண்டு வயிறு வளர்ப்பதையும் நாம் பார்க்கத் தான் செய்கின்றோம். அதே நேரம் தாம் கடவுளின் அவதாரம் என்று கூறி ஒரு உண்மை முஸ்லிமைக் கூட ஏமாற்ற முடிவதில்லை. ஏனென்றால் உடனே கடவுள் எப்படி மனிதரானார்? கடவுள் மனிதனாக மாறினால் கடவுளின் இடத்தில் தற்போது யார் இருக்கிறார்? போன்ற கேள்வியைக் கேட்டு போலித் தனத்தை தோலுரித்துக் காட்டிவிடுவர்.


இஸ்லாத்தின் இறுதி வேத நூலான அல்-குர்ஆனின் 112 வது அத்தியாயம் ஏனைய மதங்கள் விட்டுள்ள இடைவெளியைப் பூர்த்தி செய்து இறைவனுக்கு இருக்கவேண்டிய இலக்கணத்தை கச்சிதமாகக் கூறி பல தெய்வ வணக்கத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கின்றது. இந்த அத்தியாயத்தின் சிறப்பம்சம் என்ன வென்றால், எல்லோருக்கும் புரியும் விதத்தில் அதன் வசனங்கள் உள்ளன. வெறும் நான்கே வசனங்கள். மற்றும் மிக எளிய நடையிலமைந்த சின்னச் சின்ன வசனங்கள் நம்மை வியக்க வைக்கின்றன!.  அது மட்டுமல்ல இப்படி இரத்தினச் சுருக்கமாக ஒருக்காலும் மனிதனால் இறைவனுக்குரிய இலக்கணத்தைக் கூற முடியாது என்பது அல்-குர்ஆன் இறைவாக்கு என்பதற்கான ஒரு சான்றாகும். எனவேதான் அல்-குர்ஆன் மனிதனைச் சிந்திக்கத் தூண்டுகிறது. நிச்சயமாக சிந்திப்போருக்கு நிறைய சான்றுகளை பரிசாக வைத்திருக்கின்றது அல்-குர்ஆன்.

அல்-குர்ஆனின் 112 வது அத்தியாயம்:

01. (நபியே!) நீர் கூறுவீராக: அவன் – "அல்லாஹ் ஒருவனே!"
02. அல்லாஹ் (யாவற்றை விட்டும்) தேவையற்றவன் (யாவும் அவன் அருளையே எதிர்பார்த்திருக்கின்றன).
03. அவன் (எவரையும்) பெறவில்லை, (எவராலும்) பெறப்படவுமில்லை.
04. மேலும், அவனுக்கு நிகராக எவருமில்லை.

இந்த வசனங்களை ஒரு முறை ஆழ்ந்து கவணிப்போமானால் இந்த தன்மைகளுக்கு உட்பட்டவன் தான் உண்மையான கடவுளாக, வணங்குவதற்குத் தகுதியுள்ளவனாக இருக்க முடியும் என்பதனையும், உண்மையான கடவுளாகிய அல்லாஹ் தவிர்ந்த வணங்கப்படும் அனைத்தும் மதனிதக் கற்பனையில் உதித்த போலிக் கடவுள்கள் என்பதனையும் இலகுவில் புரிந்து கொள்ள முடியும்.

இதோ சத்தியத்தைத் தேடி ஒரு சலனமற்ற பயணம் தொடங்குகிறது
மேற் கூறப்பட்டுள்ள அத்தியாயத்திலுள்ள வசனங்களை ஒவ்வொன்றாக அனுகுவோம்.

01. "(நபியே!) நீர் கூறுவீராக, அவன் – 'அல்லாஹ்' ஒருவனே!"

ஒரு விஷயத்தை நாம் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது எல்லா மதத்திலும் பல கடவுளர்கள் இருப்பது போல் ‘அல்லாஹ்’ என்பது முஸ்லிம்களின் கடவுள் எனக் கருதுவது தவறாகும். யாரை முஸ்லிம்களாகிய நாம் ‘அல்லாஹ்’ என்று வணங்கி வழிபடுகின்றோம் என்றால், இந்த உலகத்தைப் படைத்து பரிபாலிக்கின்ற வல்ல நாயனான அந்த ஏக சத்தனைத்தான். தவிர ‘அல்லாஹ்’ முஸ்லிம்களுக்கு மட்டுமுள்ள தனிக் கடவுள் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது.

இந்த வசனமானது கடவுள் என்பவன் நிச்சயமாக ஒருவனாகத் தான் இருக்க முடியும் என்பதனை அடித்துக் கூறுகின்றது. ஒன்றுக்கு மேற்பட்ட கடவுளர்கள் இருந்தால் என்ன நடக்கும் என்பதனை யூகித்துக் கொள்ளலாம். வேற்று மதப் புராணங்களில் கடவுளர்களுக்கிடையில் இடம் பெற்ற சமர்கள், சச்சரவுகள், இழிவான செயல்கள் என்பன எண்ணிலடங்காதவை. ஒரு சாதாரன சிறிய நாட்டைக் கூட ஆழுவதற்கு ஒரே ஒரு ஜனாதிபதி மட்டும் தான் இருக்க வேண்டும் என உலகமே ஏற்றுக் கொண்டுள்ள போது அகிலம் அனைத்தையும் அடக்கியாள ஒன்றுக்கு மேற்பட்ட ஆட்சியாளர் இருக்கவே முடியாது என்பதனைத்தான் இந்த வசனம் விளக்குகிறது.

02. "அல்லாஹ் (யாவற்றை விட்டும்) தேவையற்றவன் (யாவும் அவன் அருளையே எதிர்பார்த்திருக்கின்றன)."

இறைவனானவன் அனைத்துத் தேவைகளை விட்டும் அப்பாற் பட்டவன். நம்மைப் போல தேவைகளுடையவன் இறைவனாகவே இருக்க முடியாது. மனிதனுக்கு எது எதுவெல்லாம் தேவைப்படுகிறதோ அவையனைத்தும் குறைகளே. எனவே இதே குறைகளை இறைவனுக்கும் கற்பிப்பது நாம் இறைவனை குறைத்து மதிப்பிடுகின்றோம் என்பதாக அமைந்துவிடும். அதுமட்டுமல்ல நமது தேவைகளை முறையிடுவதற்காக இறைவனிடம் கையேந்துகின்றோம். அவனே தேவையுள்ளவன் எனும் போது அவனிடம் நாம் எப்படி உதவி கோர முடியும்! பிச்சைக் காரனிடம் பிச்சை கேற்பது போன்றாகி விடும்.

இந்த இழுக்கை நீக்கும் விதமாகத்தான் அல்லாஹ் தனது திருமறையில் எவ்விதத் தேவையுமற்றவன் என்பது மூலம் தனக்கு மனிதர்கள் ஏற்படுத்திய பலவீனத்தை அப்புறப்படுத்துகிறான்.

இறைவனானவன் எள்ளும் பிசகாமல் தன் படைப்பினங்கள் அனைத்தையும் கண்காணித்துக் கொண்டிருப்பவன். அவனுக்கு நம்மைப்போன்றே ஆசா பாசங்கள் இருந்தால் அவற்றை நிறைவு செய்யும் நேரத்தில் உலகத்தாரின் கோரிக்கைகளை யாரிடம் முறையிடுவது? எல்லாம் வல்ல நாயனை எவ்விதக் குறைகளும் இன்றி வணங்கி வழிபடுவோமாக!

03. "அவன் (எவரையும்) பெறவில்லை, (எவராலும்) பெறப்படவுமில்லை."

இறைவனானவன் தனித்தவன் எனும் பொழுது அவனுக்கு பெற்றோர்களோ அல்லது குழந்தைகளோ இருக்க முடியாது. மனிதன் நினைப்பது போன்று இறைவனுக்கும் குடும்பம், கோத்திரம் இருக்குமானால் இறைவன் சமூகம் என்று ஒரு சமூகம் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் அப்படியொரு சமூகத்தை யாரும் பார்த்ததும் கிடையாது. அதற்கு சாத்தியமும் இல்லை. அல்லது அப்படி ஆரம்பத்தில் இருந்தார்கள் என்று கூறினால் அவர்களை ஒரு குறிப்பிட்ட காலத்தோடு மறைத்தது யார்? அல்லது குறிப்பிட்டதோர் காலத்துடன் அனைவரும் இறந்து விட்டார்கள் என்றால், இறைவனுக்கு இறப்பு தகுமா? என்ற கேள்வி நம் சிந்தனையைக் குடைகின்றது. இன்று சிலைகளாக சித்தரிக்கப்பட்டுள்ள கடவுளர்கள் அனைத்தும் கற்பனையில் தோன்றியவைகள் என்பதை நடுநிலையோடு சிந்தித்தால் அவர்களே தெரிந்து கொள்வார்கள்.

கிறிஸ்தவர்கள் கூறுவது போன்று இயேசு இறைமகன் கிடையாது. ஏனன்றால் இறைவன் வாரிசு எனும் தேவையை விட்டும் அப்பாற்பட்டவன். போதாதற்கு பைபிளில் கூட இயேசு தன்னைப்பற்றிய வாக்கு மூலத்தில் தான் இறைவனின் மகன் என்று ஒரு இடத்தில் கூட கூறவில்லை. அப்படி தனது சீடர்களில் ஒருவர் கூட நம்பவுமில்லை. மாறாக பவுலின் கற்பனையில் உதித்த காவியமாகத் தான் இந்த நம்பிக்கையைக் கூற முடியும். அதற்கு பைபிளே சான்றாகவும் உள்ளது.

அடுத்தது கடவுள் மனிதனாக வரவேண்டிய அவசியம் தான் என்ன? முதலாவது கடவுள் மனித வடிவில் வந்து தான் இவ்வுலக மாந்தருக்கு வழிகாட்ட வேண்டும் என்பது கிடையாது. கடவுள் கடவுளாக இருந்து கொண்டே தனது பனிகளைச் செய்வதுதான் கடவுளுக்குரிய பண்பாகும். உதாரணமாக, ஒரு நாட்டு ஜனாதிபதி தனது சட்டங்களை அமுல்படுத்த சாதாரன தொழிலாளியாக மாறித்தான் தொழிலாளிகள் சட்டங்களைக் கூற வேண்டும் என நினைப்பது தவறாகும்! அவ்வாறு யாராவது நினைத்தால் பைத்தியகாரத்தனம் என்போன். கடவுள் விஷயத்தில் மட்டும் ஏன் இந்த நீதமான பார்வை இல்லாமற் போனது?! கவணத்திற் கொள்க!

அடுத்தது கடவுள் மனிதனாக இவ்வுலகிற்கு வந்தால் கடவுளுக்கு இருக்கும் எத்தனையோ பிரத்தியேகத் தன்மைகளை இழக்க வேண்டியேற்படும்.

இது போன்ற இன்னோரன்ன தத்துவங்களை உள்ளடக்கியதாக இந்த வசம் இடம் பெற்றுள்ளது.

04. "மேலும், அவனுக்கு நிகராக எவருமில்லை."

 இந்த வசனமானது ஒன்றே இறைவனது தனித்தன்மையை விளக்கப் போதுமானது. இறைவனுக் ஒப்பாக எதுவுமில்லை என்று அல்-குர்ஆன் மட்டுமல்ல எல்லா மத நூல்களும் கூறிக் கொண்டிருக்கும் போதே எத்தனையோ கடவுளர்களை உண்டாக்கியவன் மனிதன். இறைவனுக்கு யாராவது அல்லது எதாவதொன்று ஒப்பாக இருக்குமானால் தன்னிகரற்ற இறைவன் என்று சொல்ல முடியாது போய்விடும்.

இவ்வையகத்தில் இறைவனைக் கண்டவன் எவருமில்லை. இப்படியிருக்க யாரும் காணாத, காணமுடியாதவனுக்கு யாரை ஒப்பாக்கி சிலைகளை வடித்தார்கள்? புரியாத புதிர்!!

எனவே சுருக்கமாகக் கூறினால், இந்த நான்கு பன்புகளும் இறைவனின் இலக்கணங்களாகும். உண்மையான இறைவனைத் தேடுபவர்களுக்கு ஒரு உறை கல்லாக எடுத்துக் கொள்ளலாம்.

படைத்தவனை விட்டுவிட்டு நாமேன் படைப்பினங்களை வணங்க வேண்டும். இதோ நீங்கள் தேடும் சத்தியப் பாதையில் ஓர் நிகரற்ற தோழனாக இந்த நான்கு வசனங்களும் இருக்கட்டும்.

04 May 2011

ஏகத்துவ இமாம் இப்ராஹீம் (அலை)!


அன்று இப்ராஹீம் (அலை) அவர்கள் ஏகத்துவத்தைப் பிரச்சாரம் செய்யும் போது தன்னந்தனி மனிதர்! அவர்கள் பக்கம் யாருமே இல்லை, அல்லாஹ்வைத் தவிர! ஆனால் இன்றோ இந்தச் சமுதாயத்திற்கே அவர்கள் இமாமாக இருக்கின்றார்கள். அவர்கள் இறந்த பிறகும் கூட அவர்களே இமாம்! ஏகத்துவத்திற்கே அவர்கள் தான் இமாம்! ஏன்? அல்லாஹ்வே தன் திருமறையில் சொல்கின்றான்.

இப்ராஹீமை அவரது இறைவன் பல கட்டளைகள் மூலம் சோதித்த போது அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார். “உம்மை மனிதர்களுக்குத் தலைவராக்கப் போகிறேன்” என்று அவன் கூறினான். “எனது வழித் தோன்றல்களிலும் (தலைவர்களை ஆக்குவாயாக!)” என்று அவர் கேட்டார். “என் வாக்குறுதி (உமது வழித் தோன்றல்களில்) அநீதி இழைத்தோரைச் சேராது” என்று அவன் கூறினான். (அல்குர்ஆன் 2:124)

அல்லாஹ் இப்ராஹீம் (அலை) அவர்களை சோதித்ததாகக் கூறுகின்றானே! அந்தச் சோதனைகள் என்ன?

தனிமை!

இப்ராஹீம் (அலை) அவர்கள் சந்தித்த சோதனைகளில் மிகப் பெரிய சோதனை அவர்கள் சமுதாயத்தை விட்டு தனிமைப் படுத்தப் பட்டது தான். ஒரு மனிதனை ஊரெல்லாம் வெறுத்து ஒதுக்கும் போது சொந்த வீட்டில் அரவணைப்பும் அன்புப் பிணைப்பும் இருந்தால் அந்தத் தனிமையை அவர் ஓரளவு தாங்கிக் கொள்ள முடியும். ஆனால் இந்த ஏகத்துவ பெருந்தலைவரை பெற்ற தந்தையே எதிர்க்கும் போது அவர்களது நிலை எப்படி இருந்திருக்கும்? வீட்டில் எதிர்ப்பு! ஊரில் எதிர்ப்பு! சமுதயாம் எதிர்ப்பு! அரசாங்கம் எதிர்ப்பு! ஆனால் இதையெல்லாம் வகை வைக்காது இந்தப் பெருந்தகை தனது கொள்கையில் உறுதியாக நிற்கின்றார்.

இந்தக் கொள்கையில் நெருப்பாய் இருந்து, சிலைகளைத் தகர்த்தெறிந்ததால் நெருப்பில் தூக்கி எறியப்படுகின்றார். (பார்க்க அல்குர்ஆன் 21:51-70)

இந்த இரண்டும் பொது வாழ்வில் இப்ராஹீம் (அலை) அவர்கள் சந்தித்த சோதனைகள்!

இந்தக் கொள்கைக்காக நாட்டைத் துறந்தார்கள். (பார்க்க அல்குர்ஆன்29:26)

நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் தவிக்கின்றார்கள்.

பின்னர் குழந்தை பிறந்து, அதன் முகம் பார்த்து அகமகிழ கொஞ்சும் வேளையில் மனைவியையும், பச்சிளம் குழந்தையையும் தண்ணீரில்லாத பாலைவெளியில் கொண்டு போய் விட வேண்டும் என்ற அல்லாஹ்வின் உத்தரவை ஏற்று அவ்வாறே அங்கு கொண்டு போய் விடுகின்றார்கள்.

குழந்தை இளவலாகி அவர்களுடன் நடை போடும் வயதை அடைந்ததும் அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று அக்குழந்தையை அறுக்க முன் வந்தார்கள். (பார்க்க அல்குர்ஆன் 37:99-107)

இவை அனைத்தும் அவர்களது சொந்த வாழ்க்கையில் அல்லாஹ் வைத்த சோதனைகள்! இந்த எல்லாச் சோதனைகளிலும் இப்ராஹீம் (அலை) அவர்கள் வென்றார்கள். அதனால் தான் அவர்களை இமாமாக ஆக்கியது மட்டுமல்லாமல் அவர்களை அல்லாஹ் தன் நண்பராகவும் ஆக்கினான்.

தன் முகத்தை அல்லாஹ்வுக்குப் பணியச் செய்து, நல்லறம் செய்து, உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றி நடந்தவரை விட அழகிய மார்க்கத்திற்குரியவர் யார்? அல்லாஹ் இப்ராஹீமை உற்ற தோழராக்கிக் கொண்டான். (அல்குர்ஆன் 4:125)

இன்றைக்கு ஹாஜிகள் மக்காவில் செய்யும் பெரும்பான்மையான வணக்கங்களும், ஹஜ்ஜுப் பெருநாளையொட்டி நாம் செய்கின்ற குர்பானி எனும் வணக்கமும் அவர்களின் தியாகத்தின் வெளிப்பாடு தான். அந்த அளவுக்கு அல்லாஹ் அவர்களை நமக்கு இமாமாக ஆக்கி வைத்து, அவர்களை – அவர்களது கொள்கைகளை எதிர்த்த மக்களை வேரறுத்து விட்டான். இதனால் தான் எல்லாம் வல்ல அல்லாஹ் நபி (ஸல்) அவர்களை இப்ராஹீம் (அலை) அவர்களின் மார்க்கத்தைப் பின்பற்றுமாறு கூறுகின்றான்.

“(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!” என்று உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். அவர் இணை கற்பிப்பவராக இருந்ததில்லை. (அல்குர்ஆன் 16:123)

நபி (ஸல்) அவர்கள் முதல் அவர்களது உம்மத்தினர் அனைவருக்கும் இப்ராஹீம் (அலை) அவர்களை அல்லாஹ் முன்மாதிரியாக ஆக்கி வைத்தான்.

“உங்களை விட்டும் அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும் உங்களுக்கு மிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது” என்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. “உங்களுக்காக பாவ மன்னிப்புத் தேடு வேன். அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு எதையும் செய்ய நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை” என்று இப்ராஹீம் தம் தந்தையிடம் கூறியதைத் தவிர. (இதில் அவரிடம் முன்மாதிரி இல்லை) (அல் குர்ஆன் 60:4)

இப்ராஹீம் தம் தந்தைக்காக பாவ மன்னிப்புத் தேடியது, தந்தைக்கு அவர் அளித்த வாக்குறுதியின் காரணமாகவே.

அவர் அல்லாஹ்வின் எதிரி என்பது அவருக்குத் தெரிந்த பின் அதிலிருந்து விலகிக் கொண்டார். இப்ராஹீம் பணிவுள்ளவர்; சகிப்புத் தன்மை உள்ளவர். (அல் குர்ஆன் 9:114)

இணை வைப்பவர்களிடம் இப்ராஹீம் (அலை) அவர்கள் கடைப்பிடித்த அந்தக் கடுமையான அணுகுமுறையை அல்லாஹ் அழகிய முன்மாதிரி என்று கூறுகின்றான். ஆனால் இன்று ஏகத்துவவாதிகள் எனப்படுவோர், இணை வைப்பவர்களிடம் இந்த அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதில்லை. முஸ்லிம் இணைவைப்பாளர்கள், காஃபிர் இணைவைப்பாளர்கள் என்று இரு கூறாகப் பிரித்துப் பார்க்கின்றனர். முஸ்லிம் இணைவைப்பாளர்களை திருமணம் முடிக்கலாம், அவர்களுக்குப் பின்னால் நின்று தொழலாம் என்றெல்லாம் கூறுகின்றார்கள்.

இதற்கு நம்மவர்கள் கூறும் சாக்கும் சமாதானமும், அவர்கள் ஹிதாயத்துக்கு – நேர்வழிக்கு வந்து விடலாம் என்ற வாதம் தான்.

தமது இறைவனின் திருமுகத்தை நாடி காலையிலும், மாலையிலும் தமது இறைவனைப் பிரார்த்திக்கும் மக்களுடன் உம்மைக் கட்டுப்படுத்திக் கொள்வீராக! இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியை நாடி அவர்களை விட்டும் உமது கண்களைத் திருப்பி விடாதீர்! நம்மை நினைப்பதை விட்டும் எவனது சிந்தனையை நாம் மறக்கடிக்கச் செய்து விட்டோமோ, அவனுக்குக் கட்டுப்படாதீர்! அவன் தனது மனோ இச்சையைப் பின்பற்றுகிறான்.

அவனது காரியம் வரம்பு மீறுவதாக உள்ளது. (அல் குர்ஆன் 18:28)

மக்கத்து முஷ்ரிக்குகளின் பிரமுகர்கள் இஸ்லாத்திற்கு வந்து எப்படியேனும் இஸ்லாத்திற்கு வந்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்பிரமுகர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க நினைக்கின்றார்கள். ஆனால் அல்லாஹ் இந்தச் செயலை கண்டிக்கின்றான். இருப்பவர்களுக்கு முக்கியத்துவம் வழங்குவது தான் சரியான செயல் என்று கூறுகின்றான்.

இதே போல் மற்றொரு சந்தர்ப்பத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறைவன் கண்டிக்கின்றான்.

அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் என்ற பார்வையற்ற தோழர் நபிகள் நாயகத்திடம் வந்தார். எனக்கு அறிவுரை கூறுங்கள் என்றார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இணை வைப்பவர்களில் முக்கியப் பிரமுகர் ஒருவர் இருந்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்தப் பார்வையற்ற தோழரைப் புறக்கணித்து விட்டு, முக்கியப் பிரமுகரின் பால் கவனம் செலுத்தினார்கள். “நான் கூறுவதில் தவறு ஏதும் காண்கிறாயா?” என்று அந்தப் பிரமுகரிடம் நபியவர்கள் கேட்க, அவர் இல்லை என்று கூறினார். அப்போது தான் அல்குர்ஆன் 80வது அத்தியாயம் 1 முதல் பத்து வரையிலான வசனங்கள் அருளப்பட்டன. ஆதாரம்: திர்மிதி – 3452, 3328, முஸ்னத் அபூயஃலா – 4848

தன்னிடம் அந்தக் குருடர் வந்ததற்காக இவர் கடுகடுத்தார். அலட்சியம் செய்தார். அவர் தூயவராக இருக்கலாம் என்பது (முஹம்மதே!) உமக்கு எப்படித் தெரியும்? அல்லது அவர் அறிவுரை பெறலாம். அந்த அறிவுரை அவருக்குப் பயன் அளிக்கலாம். யார் அலட்சியம் செய்கிறானோ அவனிடம் வலியச் செல்கிறீர். அவன் பரிசுத்தமாக ஆகாவிட்டால் உம் மீது ஏதும் இல்லை. (இறைவனை) அஞ்சி உம்மிடம் யார் ஓடி வருகிறாரோ அவரை அலட்சியம் செய்கிறீர். (அல் குர்ஆன் 80:1-ரி10)

நபி (ஸல்) அவர்கள் இணை வைப்பவர்களின் பிரமுகர்களுக்கு முக்கியத்துவம் அளித்தது, அவர்கள் இஸ்லாத்தை நோக்கி வந்து விட வேண்டும் என்பதற்காகத் தான்.

ஹிதாயத்துக்கு வந்து விடுவார்களே என்ற எதிர்பார்ப்பு தான் நபி (ஸல்) அவர்களுக்கும் ஏற்பட்டது. ஆனால் இறைவன் அந்த வாதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. இப்போது இஸ்லாத்தில் இருப்பவர்களுக்குத் தான் முக்கியத்துவம் அளிக்கப் பட வேண்டுமே தவிர, முஷ்ரிக்காக இருப்பவர் இஸ்லாத்திற்கு வந்து விடுவார் என்று நினைத்து அவருக்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடாது என்று அல்லாஹ் மேற்கண்ட வசனங்களில் கூறுகின்றான்.

ஆனால் இதை நமது சகோதரர்கள் விளங்கிக் கொள்ளவில்லை. இணை வைப்பில் மூர்க்கமாக நின்று பிரச்சாரம் செய்பவர்களிடம் கூட பெண் எடுக்கத் தயங்குவதில்லை. இது போன்று இன்ன பிற விஷயங்களிலும் இந்த ஹிதாயத் வாதத்தின் அடிப்படையிலேயே இணை வைப்பவர்களிடம் நெருக்கத்தை வைத்திருக்கின்றனர். இதற்கெல்லாம் காரணம், இப்ராஹீம் (அலை) என்ற இமாமை முழுமையாகப் பின்பற்றாதது தான். அல்லாஹ் கூறும் அந்த அழகிய முன்மாதிரியைப் புறக்கணித்தது தான்.

அதற்காக இணை வைப்பவர்களிடம் எப்போதும் மோதல் போக்கைக் கடைப்பிடிக்குமாறு இஸ்லாம் கூறவில்லை. மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும் அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்.

மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடுவோர், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றியோர், உங்களை வெளியேற்றுவதற்கு உதவி புரிந்தோர் ஆகியோரை உற்ற நண்பர்களாக ஆக்குவதையே அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்கிறான்.

அவர்களை உற்ற நண்பர்களாக்கிக் கொள்வோரே அநீதி இழைத்தவர்கள். (அல்குர்ஆன் 60:8,9)

இந்த வசனங்களின் படி மார்க்க விஷயங்களில் நம்முடன் மோதல் போக்கைக் கடைப்பிடிக்காதவர்களுடன் பழகுவதோ அல்லது அவர்களுக்கு நன்மை செய்வதோ தவறில்லை. ஆனால் அவர்களும் இணை வைப்பாளர்கள் என்ற வட்டத்தை விட்டு வெளியே வந்து விட மாட்டார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

-ஷம்சுல்லுஹா

பயணத்தில் கஸர் செய்தல் எத்தனை நாட்கள் இச்சலுகையைப் பயன்படுத்தலாம்? பல வருடங்கள் வெளியூரில் இருப்பவர்கள் இவ்வாறு சுருக்கித் தொழலாமா?

ஒருவர் எத்தனை நாட்கள் பயணத்தில் இருந்தால் ஜம்வு, கஸ்ர் செய்யலாம் என்பதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வரையறை எதுவும் கூறவில்லை. எனவே இத்தனை நாள் தங்கினால் மட்டுமே கஸ்ர் செய்ய வேண்டும்; அதற்கு மேல் தங்கினால...் கஸ்ர் செய்யக் கூடாது என்று கூறுவதற்கு மார்க்கத்தில் யாருக்கும் அதிகாரம் இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (மக்காவில்) பத்தொன்பது நாட்கள் தங்கினார்கள். அந்நாட்களில் கஸ்ர் செய்தார்கள். நாங்களும் பத்தொன்பது நாட்களுக்குப் பிரயாணம் செய்தால் கஸ்ர் செய்வோம். அதிகமானால் முழுமையாகத் தொழுவோம்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி); நூல்: புகாரி 1080


இந்த ஹதீஸில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்தொன்பது நாட்கள் தான் கஸ்ராகத் தொழுதுள்ளார்கள் என்பதால் அதற்கு மேல் தங்குபவர்கள் முழுமையாகத் தொழ வேண்டும் என்று சிலர் வாதிடுகின்றனர். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கூற்றை இதற்கு ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

ஆனால் பத்தொன்பது நாட்களுக்கு மேல் முழுமையாகத் தொழுவோம் என்பது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் சொந்தக் கூற்றாகவே கூறப்பட்டுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெளியூரில் அதிகப்பட்சமாகத் தங்கியது பத்தொன்பது நாட்கள்; அவர்கள் தங்கிய அத்தனை நாட்களிலும் சுருக்கித் தொழுதுள்ளார்கள் என்பதைத் தான் இந்த ஹதீஸிலிருந்து விளங்க முடியும்.

அதற்கு மேல் தங்கினால் சுருக்கித் தொழக் கூடாது என்றால் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியிருப்பார்கள். அவ்வாறு வரையறை எதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறாததிலிருந்து, இதற்குக் காலவரை இல்லை என்பதை அறியலாம்.
அதே சமயம் வெளியூரில் தங்குபவர்கள் சுருக்கித் தொழுவது கட்டாயமில்லை. ஒருவர் விரும்பினால் முழுமையாகத் தொழுவதற்குத் தடையில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் மதீனாவிலிருந்து மக்கா நோக்கி உம்ரா செய்யப் புறப்பட்டேன். நான் மக்காவை அடைந்த போது, 'அல்லாஹ்வின் தூதரே! எனது தாயும், தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். நீங்கள் கஸ்ர் செய்கிறீர்கள்; நான் முழுமையாகத் தொழுகிறேன். நீங்கள் நோன்பு நோற்கவில்லை; நான் நோன்பு நோற்கிறேன்' என்று நான் கேட்ட போது 'ஆயிஷாவே! சரியாகச் செய்தாய்!' என்றார்கள். என்னைக் குறை காணவில்லை.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி); நூல்: நஸயீ 1439


ஒருவர் எத்தனை நாட்கள் பயணத்தில் இருந்தால் ஜம்வு, கஸ்ர் செய்யலாம் என்பதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வரையறை எதுவும் கூறவில்லை.
ஒருவர் உள்ளூரில் இருக்கும் போதும் எப்போதாவது ஜம்வு செய்து (சேர்த்துத்) தொழுவதற்கு அனுமதி உள்ளது. எனினும் இதையே வழக்கமாக்கிக் கொள்ளக் கூடாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் லுஹ்ரையும், அஸ்ரையும், மஃரிபையும், இஷாவையும் ஏழு, எட்டு ரக்அத்களாகத் தொழுதார்கள்.
அறிவிப்பவர்: இப்னுஅப்பாஸ் (ரலி); நூல்: புகாரீ 543

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் லுஹ்ரையும் அஸ்ரையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள். மஃரிபையும் இஷாவையும் ஒரே நேரத்தில் தொழுதார்கள். அப்போது (போர் அபாயம் மிகுந்த) அச்ச நிலையிலோ, பயணத்திலோ அவர்கள் இருக்கவில்லை.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி); நூல்: முஸ்லிம் 1267


இந்த ஹதீஸை அடிப்படையாகக் கொண்டு காலமெல்லாம் உள்ளூரில் ஜம்வு செய்யலாம் என்று யாரும் புரிந்து கொள்வதில்லை. எப்போதாவது சில நேரங்களில் உள்ளூரில் ஜம்வு செய்யும் நிலை ஏற்படலாம். அது போன்ற நேரங்களில் இச்சலுகையைப் பயன்படுத்திக் கொள்கிறோம். எல்லா நேரத்திலும் ஒருவர் இச்சலுகையைப் பயன்படுத்தி வந்தால் அவரைப் பொருத்தவரை காலமெல்லாம் மூன்று வேளைத் தொழுகையாகி விடும்.

இந்தச் சலுகையைப் புரிந்து கொள்வது போல் மாதக் கணக்கில் வெளியூரில் இருப்பவர்கள் அன்றாடம் இச்சலுகையைப் பயன்படுத்தாமல் அரிதாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஏனெனில் தொடர்ந்து ஜம்வு செய்து வந்தால் தொழுகை குறிப்பிட்ட நேரத்தில் தொழ வேண்டும் என்ற இறைவனின் கட்டளைக்குப் பொருள் இல்லாமல் போய்விடும்.


நன்றி http://www.onlinepj.com/